Monday, January 24, 2011

படம் ஊத்திக்கிச்சா? ரொம்ப சந்தோஷம்!

அன்று அந்த இரண்டு புதுப் படங்கள் ரிலீஸாயின. ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படங்கள்.
ஒன்று ஸ்டண்ட் மன்னன் ரத்னகுமார் நடித்தது. மற்றொன்று இளமை இளவரசன் அருண்கபூர் நடித்தது.
சாயங்காலம்.
ரத்னகுமார் வீட்டில் ஒரு குழு.
"அண்ணே, அருண் ஒழிஞ்சான் "இன்னையோட" - படம் டப்பாவாம்."
"அப்படியா?" ரத்னகுமார் சந்தோஷப்பட்டான்.
"பின்னே என்னாண்ணே, பாட்டெல்லாம் பூட்டுது, டான்ஸ் கூட எடுபடலையாம்."
"அடப் பாவமே! அப்ப ஓடாதா?'
"எங்கேர்ந்து ஓடறது? 'ஏ' சென்டர்லே ஒரு வாரம் போவுமாம். பி., சி. எல்லாம் அம்பேல்"
"அப்ப...பட்டாசு கொளுத்துங்க...ஸ்வீட் சாப்பிடுங்க!"
அதே சமயம் அருண்கபூர் வீட்டில்--
"ரத்னத்தோட படம் பொழச்சுக்குமாடா?"
"எங்க தலைவா, சுத்தமா ஊத்திகிச்சு, ஸ்டண்ட் எதுவும் எடுபடலையாம். அப்ப அவுட்தானே?"
"நாலு வாரமாவது போவுமாமா?"
"நாலு வாரமா?, நாலு நாள் ஓடுமான்னு கேளுங்க. கதையே அம்பேல்...இதோட ரத்னகுமார் கதை குளோஸ்!"
"அப்படியா! பட்டாசு வெடிச்சு ஸ்வீட் சாப்பிடுங்க."
மறுநாள்.
ரத்னகுமாரும் அருண்கபூரும் ஒரு நடிகையின் திருமண விழாவில் சந்தித்துக் கொண்டார்கள்.
"ஹலோ அருண், படம் நல்லா வந்திருக்காமே? வாழ்த்துக்கள்!"
"விஷ் யூ த சேம் ரத்னம். நீங்க நல்லா செய்திருக்கீங்கன்னு சொன்னாங்க, வாழ்த்துக்கள்."
இருவரும் கை குலுக்கிக் கொண்டார்கள். கேமராக்கள் பளிச்சிட்டன.

(குமுதத்தில் வெளியான என் சிறுகதை)