Thursday, April 21, 2011

புதுச் செருப்பு



'வாசலில் செருப்பு பத்திரமாக இருக்குமா?'
அதே நினைவோடு கல்யாண மண்டபத்தில் உட்கார்ந்திருந்தான் சேகர். அவன் கண்கள் மணவறையை பார்த்துக்கொண்டிருந்தனவே தவிர நடந்துகொண்டிருந்த சடங்குகளிலோ,ஹோமத்தை வலம் வந்துகொண்டிருந்த மணமக்கள் மீதோ அவன் கவனம் இல்லை.
புத்தம் புது செருப்பே அவனது சிந்தனையை முழுதும் ஆக்ரமித்திருந்தது.
தாம்பூலப் பைகள் வைக்கப்பட்டிருக்கின்றனவா? எடுத்துக் கொண்டு புறப்படலாம் என்று வாசலைப் பார்த்தான். இன்னும் இல்லை.
நீட்டப்பட்ட தாம்பாளத்திலிருந்து அவன் கை அனிச்சையாக அட்சதையை எடுத்தது.
'கெட்டி மேளம்...கெட்டி மேளம்' என்று குரல் வரவே வாசல்பக்கம் விழி வைத்தபடி அட்சதையை வீசினான்.
அப்பா... புறப்படலாம் என்னும்போது ஒருவர் அப்படியே வழி மறித்து சாப்பாட்டிற்கு அனுப்பினார். நழுவ முடியாமல் சாப்பிடச் சென்றான்.
இலையில் என்ன பரிமாறப்பட்டது என்கிற உணர்வேயின்றி புதுச் செருப்பு நினைவாகவே சாப்பிட்டு முடித்தான்.
அவசர அவசரமாக தாம்பூலத்தை எடுத்துக்கொண்டு வாசலுக்கு வந்தவனுக்கு அதிர்ச்சி.
'புதுச் செருப்பைக் காணோம்!'
'ச்...சீ...பயந்தது போலவே நடந்துவிட்டதே! அதற்குள்ளாக செருப்பை மாட்டிக்கொண்டு போய்விட்டானே!'
ஏமாற்றத்தோடு தான் விட்டுச் சென்ற தன்னுடைய பழைய செருப்பையே மாட்டிக்கொண்டு வெளியேறினான் சேகர்.







(தமிழ் அரசி 5 .7.92 இதழில் வெளியான என் சிறுகதை)