Friday, December 24, 2010

எப்படிடா கண்ணு?


ஷீலா குட்டி பள்ளி ஓவியப் போட்டியில் முதல் பரிசு வாங்கியிருக்கிறாள் என்றதும் ஹரிக்கும் அவன் மனைவி சந்திராவிற்கும் ஏக சந்தோஷம்.

ஆண்டு விழாவிற்குச் சென்றார்கள். அங்கே ஷீலா வரைந்திருந்த ஓவியத்தைப் பார்வைக்கு வைத்திருந்தார்கள். முதல் பரிசு என்று அறிவித்து ஷீலாவை அழைக்கவும், பலத்த கரவொலிக்கிடையே ஷீலா மேடையேறிப் பரிசினைப் பெற்றுக் கொண்டாள்.

பள்ளித் தலைமையாசிரியை பேசும்போது, "குடியின் தீமை என்ற தலைப்பில் படம் வரையச் சொன்னோம். சிறுமி ஷீலா குடிப்பழக்கத்திற்கு முன் ஒரு மனிதன் திடகாத்திரமாக இருப்பது போலவும், குடிப்பழக்கத்திற்க்குப் பின் அதே மனிதன் மெலிந்து ஒரு கால் இழந்து கிடப்பது போலவும் வரைந்திருக்கிறாள். குடியினால் ஒருவன் தேக ஆரோக்கியம் கெடுவதோடில்லாமல் போதையால் அவன் எங்கேயாவது தள்ளாடி விழுந்து விபத்துக்குள்ளாகி உறுப்புகளையும் இழக்க நேரிடும் என்று கற்பனை செய்த ஷீலா உண்மையிலேயே பாராட்டிற்குரியவள்," என்று வெகுவாகப் புகழ்ந்து பேசினார்.

ஹரியும் சந்திராவும் உச்சி குளிர்ந்து போனார்கள். வீட்டிற்கு வந்ததும் ஹரி ஷீலாவை அருகில் அணைத்து முத்தமிட்டு--

"எப்படிடா கண்ணு குடிகாரன் விபத்திலே காலை இழந்திட்டான்னு கற்பனை பண்ணினே?" என்று கேட்கவும், ஷீலா...

"நான் கால் வரையறதுக்குள்ளாற நேரமாச்சுன்னு டீச்சர் படத்தைப் பிடுங்கிட்டாங்கப்பா," என்றாள் அப்பாவித்தனமாக.

(2,4.92 "குமுதம்" இதழில் வெளியான என் ஒரு பக்கக் கதை)

6 comments:

Rekha raghavan said...

அபாரம்.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல கதை. வாழ்த்துக்கள்.

கே. பி. ஜனா... said...

நல்ல காமெடி சார்!

ரிஷபன் said...

//நான் கால் வரையறதுக்குள்ளாற நேரமாச்சுன்னு டீச்சர் படத்தைப் பிடுங்கிட்டாங்கப்பா," என்றாள் அப்பாவித்தனமாக//

எதிர்பார்த்திராத முடிவு!

kuppusamy said...

கதை படிக்கும் போது முடிவு இப்படித்தான் அமையும் என்று நினைத்தேன் நான் நினைத்தது அந்தக் குழந்தையின் அப்பா ஒரு கால் இல்லாதவராக இருப்பார் என்று அனால் எதிர் பாராத திருப்ப்முனை. நல்ல கதை.

R.Gopi said...

ஹா...ஹா...ஹா...

நல்ல அதிரடியான முடிவு எதிர்பார்த்தேன், இது அப்பாவிதனமான ஒரு குழந்தையின் முடிவாக இருந்தது...

நான் நினைத்தது அந்த குழந்தை வீட்டில் அவர் அப்பா குடிப்பதை நினைத்து வரைவதாக!!